Saturday, 3 October 2015

புலி - ரசிகனின் வலி

காலை காட்சி கேன்சல், ஓவர்சீஸ்க்கு கீ வரல, இன்கம் டாக்ஸ் ரைடு, ரிலீஸ் ஆகுமா ஆகாதான்னு பல மணி நேர ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்க்கு பிறகு ஹே புலி புலி புலி புலி புலி புலி புலி புலின்னு D.S.P  குரலில் (பின்ன, நமக்கென்ன S.P.B குரலா) பாடிக்கிட்டே வெறியோட டிக்கெட் வாங்கிட்டு படத்துக்கு போனா - படத்துல இருந்து மீமே (Meme) எடுத்து பாத்துருக்கேன், ஆனா இவனுங்க மீமேவையே முழு படமா எடுத்து வச்சிருக்காங்க.  
ஆற்றுல வர கூடை - கூடைல ஒரு குழந்தை - அந்த குழந்தையே நீங்க தான் விஜய் சார்ன்னு படம் ஆரம்பிக்குது. இந்த குழந்தை ஒரு இலைய சாப்டணும், ஏனா அவரு இலை(ளை)ய தளபதி. அந்த குழந்தையும் மக்களும் வளர்ல ஊருல கொடுங்கோல் ஆட்சி நடக்குது. எப்டி பாசத்துக்கு முன்னாடி பாப்பாவா இருக்குற விஜய் வளர்ந்து பகைக்கு முன்னாடி டாப்பா ஜெயிச்சி வராரு தான் கொர்ர்ர்ர்ர்ர்... புலி. விஜய் பாராட்டியே ஆகணும் - என்ன Gutsடா, வேற Genreலா ட்ரை பண்றாருன்னு, கடசீல பாத்தா அதே அஞ்சு பாட்டு, மூணு பைட்டு Template படம் தான். அட அறிவாளி பாடிசோடா, வீடு வெளிய புது பெய்ன்ட் அடிச்சிட்டு, உள்ள அதே அழுக்க தான்டா வச்சிருக்கீங்க.

 விஜய் படம் நல்லா இல்லனாலும் 'விஜய்காக ஒன்ஸ் பாக்லாம்'ன்னு சொல்லி மனச தேத்திப்போம். ஆனா இங்க படத்துக்கு மிகப்பெரிய மைனஸ் விஜய் தான். குமார் மெஸ்ல மூச்சு முட்ட தின்னுட்டு, செரிச்சும் செரிக்காமலும்  'ஆ.ஆஆஆ ... து வந்து', 'பிபிபிபிபின்ன்ன்... ன என்ன சொல்ல'ன்னு வாய்ஸ் மாடுலேசன்ல பேசுறது, சிக்கிலிக்கா பண்ணி விட்ட மாதிரி, வளஞ்சி குழைஞ்சி ஆடிட்டே நடிக்கறது - இதெல்லாம் க்யூட், குழைந்தைகள் ரசிப்பாங்கன்னு இன்னும் எத்தன காலத்துக்கு நம்பி, இத திரும்ப திரும்ப பண்ணி நம்பள இம்ச செய்ய போறாரு தெரில. கத்தில கூட முதற்பாதில கொஞ்ச நேரம் தான் இப்டி செ.செ.வ.கு. ஆனா புலில முழு படமும் ஐயோ ராமா. பத்தாததுக்கு அரசியல் ஆசைக்கு தூபம் போடுற காட்சிகள், வசனங்கள். இதுக்கு மேல எங்களால முடியாதுப்பான்னு இருக்றப்ப, சங்கிலி முருகன் விஜய்ய தனியா கூட்டிட்டு போய் 'உங்கப்பா யாருன்னு தெரியுமா?'ன்னு இன்னொரு விஜய்ய அறிமுகப்படுத்துறார். சிரிக்கறதா, அழுவறதான்னு நமக்கே குழப்பம் வர மாதிரி ஐடெக்ஸ் மையில் தீட்டிய மீசை, கொஞ்சமும் செட் ஆகாத தொடப்ப குச்சி விக்கோட வராரு. வில்லு அப்பா கெட்-அப் தொத்றுச்சு. என்ன கொடும மேஜர் சரவணன் இது. வாயில வந்த கொட்டாவி முடியறதுகுள்ளேயே பிளாஷ்பாக் ஓவர்.  ஆதிகாலத்து படங்கறதால 'ஆதி' காலத்து பிளாஷ்பாக் - அவ்ளோ கொடூரம்.  இதுல விஜய் வேற வரவே வராத மாடுலேசன்ல முக்கி முக்கி கத்தி கத்தி அரசியல் டயலாக் அடிக்றாரு. அண்ணா, ப்ளீஸ்ன்னா. இதுக்கு நீங்க முழு நீள அரசியல் படமே பண்ணிட்டு போயிருங்க.

கதாநாயகிகள் எதுக்குனே தெரில. ஸ்ருதிஹாசன் நாக்குல தமிழ் உச்சரிப்பு அவர் பாட்டுல ஆடுறத விட நல்லா ஆடுது. தெரியாத்தனமா விஜய் கிட்ட  'எழக்கறுதுன்னா என்னையே எழக்குறேன்'ன்னு சொல்லிடறாங்க. அதுனால படம் புல்லா படுத்துட்டே இருக்காங்க, ஐ மீன் ஸ்ரீதேவி போட்ட மயக்கத்துல - ச்லீபிங் பியுட்டி (Sleeping Beauty). ஹன்சிகா ஏன் படத்துல இருக்காங்கன்னு அவங்களுக்கே தெரியல. நம்ப கல்யாண ரீசப்சன்ல ஆடும் நண்பர்கள் போல , ரெண்டு பாட்டுக்கு ஆடிட்டு போயிடறாங்க. நந்திதா, ஐயோ பாவம் - 'ஆஆஆஆஆ'ன்னு இந்த ஒரு வசனத்த கத்துவதற்க்கே வராங்க. இவர்கள் மத்தியில் கொடுத்த கதாபாத்திரத்தை கெடுக்காமல், அதுக்குரிய கம்பீரத்தையும், பயமூட்டும் உடல்மொழியோடு கச்சிதமாக நடித்திருக்கிறார் ஸ்ரீதேவி. விஜய் இன்ட்ரோ விட இவங்களுக்கு கெத்து இன்ட்ரோ. படத்தின் மிகப்பெரிய பலமே இவர் வரும் ரெண்டாம் பாதி காட்சிகள் தான். நான் ஈ ல கலக்குன சுதீப்,  பின்னாடி ஆபரேஷன் பண்ண மாதிரி சைடா தூக்கி உக்கார்ந்து போஸ் மட்டும் கொடுக்றாரு.

படம் நல்லா Flowல பிக்-அப் ஆகுற டைம்ல பாடல்கள் சென்னை ரோட்ல வந்த போந்து மாதிரி, பயணத்தையே கெடுக்குது. சித்திரகுள்ளர்கள் ஊரை அறிமுகப்படுத்தி பிரம்மிக்க வைத்த அதே நேரம், அங்கேயும் நமது தளபதி ஜிங்கிலியா ஜிங்கிலியா குத்து பாட்டுக்கு ஆடறாரு. ரெண்டாவது பாதியில் ஸ்ரீதேவி அற்புதமான அறிமுகத்திற்கு பிறகு மன்னவனே பாடல், விஜய்க்கு மாஸா ஒரு சீன் வைத்து, சம்பந்தமே இல்லாம சொட்ட வாழ சொட்ட வாழன்னு இன்னொரு குத்து பாட்டு. நடனமாச்சும் ஆறுதல் என்று நினைத்தால், ஸ்டெப்ஸ் எல்லாம் சொல்ல முடியாத அளவுக்கு - ஒத்த கால தூக்கிட்டு எதையோ பாத்து ஓடுற ஸ்டெப், தொடைய தூக்கி பின்னாடி இருந்து கைய வுட்டு - ஐயோ தளபதி, என் இப்டி? கெட்ட கனவாக மறக்க நினைக்கும் இன்ட்ரோ சாங். பாடல்களில் ஒரே ஆறுதல் ஆடியோவில் இருந்த மனிதா மனிதா பாடல் படத்தில் இல்லை. எல்லாமே மொக்கையா போயிட்டு இருக்கும் போது பின்னணி இசையும் பெருசா கவனத்தை கவர்ர மாதிரி இல்ல.


நாங்க வேணா முருகதாஸ், ஷங்கர் கிட்ட பேசி இன்னொரு படம் பண்ண சொல்லவா, தம்பி?

விஜய் ரசிகானாக ஏமாற்றம் அடைந்ததை விட, சிம்புதேவன் ரசிகனாக கிடைத்த ஏமாற்றமே அதிகம். இம்சை அரசன், அறை என், இரும்பு கோட்டை, ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும் என Creativeவாக யோசித்து ரசிக்கும்படியான திரைக்கதை அமைத்தவர். ஒரு Established பெரிய இயக்குனராக இல்லாவிட்டாலும், ஜனரஞ்சக ரசிகர் கூட்டம் (Fan Following) இல்லாவிடினும் வித்தியாசமான காட்சி அமைப்பிற்கு பெயர் போனவர். கதைகென்று பெரிதாக மெனக்கெடாமல், திரைக்கதையில் இருக்கும் பாண்டஸி, அரசியல் நையாண்டி ,  சின்ன சின்ன நகைச்சுவை என்று படம் பார்ப்பவர்களை கவரும் அம்சங்கள் பல. உதாரணம் - இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் பழக்கப்பட்ட கவ்-பாய் கதையாக இருந்தாலும், அதில் வரும் விஷயங்கள் அட போட வைக்கும். ஜெய்சங்கர்புரம், அசோகபுரம்  என்று கிராமங்களுக்கு பெயர், கவ்-பாய் தொப்பி போட்ட கோயில் ஐயர், காபி-டே வெளியே வடை போடும் டீக்கடை, கிழக்குகட்டை (Eastwood) என்று கதாபாத்திரத்துக்கு பெயர், கோர்ட்டில் காந்தி படத்திற்கு பதிலாக அமிதாப் படம், வில்லன் இருக்கும் ஊருக்கு அமெரிக்கா பின்னணியில் காட்சிகள் வைத்து அணுகுண்டு ஒப்பந்தம், அமேரிக்கா ஏகாபத்தியத்தை கலாய்ப்பது என கவனத்தை ஈர்க்கும் விஷயங்கள் பல. அப்படி  Creative ஆன ஆளு, விஜய்யோடு இணையும் போது , அதுவும் பாண்டஸி படம் என்னும் போது - நாம் எதிர்பார்த்த விஜய் Trademarkகும் இல்லை, சிம்புதேவன் Trademarkகும் இல்லை. 
பாண்டஸி படம் எடுப்பதா இல்லை விஜய் ஸ்டைலில் மாஸ் படம் எடுப்பதா என குழம்பி குடிகாரனை போல் தள்ளாடும் திரைக்கதை அமைத்து கோட்டை விட்டு விட்டார். நகைச்சுவையில் பெருசாக ஸ்கோர் செய்யும் இருவரும் - Unintentional காமடியில் பாலுக்கு பால் சிக்ஸர் அடிக்கின்றனர். முதற்பாதி அரை மணி நேரம் ப்ளாட். வேதாளகோட்டையை தேடி விஜய் பயணிக்கும் காட்சிகள், சித்திரக்குள்ளர்கள் ஊர், ஆல்பர்ட் - அல்பா, பீட்டர் - பீட்டா, காமாட்சி- காமா என்று அவர்களின் பெயர்கள், வேர்கடலை ஓட்டில் மார்கச்சை என இடைவேளை வரை தான் நமக்கு தெரிந்த சிம்புதேவன் அங்கங்கு எட்டி பார்க்கிறார். இரண்டாம் பாதியும் ஸ்டீவர்ட் பின்னி பந்து வீச்சை போல் மிதவேகத்தில் தங்குதடை இன்றி செல்கிறது. பிளாஷ்பாக் ஆரம்பத்தில் அதள பாதளத்தில் விழுந்த படம், அதிலிருந்து எழவே இல்லை. அதுவும் மந்திரவாதி, சாகவரம், All Out Mosquito Repellant மோதிரம் என்று ராமநாராயணன் - ராம்கி  - கரண் படம் பார்த்த பீல். பாண்டஸி படத்தில் லாஜிக் பார்ப்பது மடத்தனம் தான். அனால் அபத்த காட்சிகள் இருந்தால் என்ன செய்ய? உதாரணம் : கோட்டைக்கு வந்த ஒடனே ஏதோ ஐ.டி கம்பெனி லிப்ட் ஏறி பதினெட்டாவது மாடிக்கு செல்வது போல, சுலபமாக விஜய் போய் ஸ்ருதிஹாசனை பார்ப்பது. பிளாஷ்பாக் கிளைக்கதை என்ற ஒன்றே இல்லாமல், இரண்டாம் பாதி முழுக்க, விஜய்-சுதீப்-ஸ்ரீதேவி இவர்களை சுற்றி காட்சிகளை வைத்து, விஜய் ஸ்ருதியை கண்டுபிடிக்க சிலபல சிரமங்கள், சுதீப்-ஸ்ரீதேவியிடம் மாட்டிக்கொள்ளாமல் ஆள்மாரட்ட ஆட்டத்தை தொடர்வது என சுவாரசிய திரைக்கதையை நகர்த்தி இருக்கலாம் - விஜய்யின் அரசியல் ஆசைக்கு பலிகடா ஆகாமல்.

நல்ல காஸ்ட், பிரம்மாண்ட உழைப்பை கொட்டிய கலை இயக்குனர் டீம், நட்டியின் சூப்பர் ஒளிப்பதிவு, இதெல்லாம் இயக்குனர் சிம்புதேவன் வேஸ்ட் பண்ணிடாருன்னு தான் சொல்லணும். அவர மட்டும் குறை சொல்லி என்ன பிரயோஜனம். தோனிக்கு கிடைத்த ஜத்து மாதிரி, இவருக்கு விஜய். பெரிய ஸ்டார் இல்லாத அடுத்த படத்தில் சிம்புதேவன் கலக்குவார், 'என் பேச்ச கேட்டு மூடிட்டு நடிங்க'ன்னு Controlல வச்சிக்குற இயக்குனர் படத்தில் விஜய் பட்டய கெளப்புவார் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்.

புலி - வெய்டிங் அட்'லி'


வருகைக்கு நன்றி!!

Blogger templates

Custom Search