Saturday, 5 September 2015

பாயும் புலி - குறி மிஸ்

பாண்டியநாடு வெற்றிக்கு பிறகு விஷால் - சுசீந்திரனின் கூட்டணியில் வெளிவந்துருக்கும் திரைப்படம். பணம் பிடிங்கும் ஈவு இரக்கமற்ற கடத்தல் கும்பலிடம் இருந்து தொழிலதிபர்களை காப்பாற்றும் நேர்மையான போலீஸ் என்கிற இட்லியை பேமிலி செண்டிமெண்ட் சாம்பாரில் முக்கி எடுத்த கதை. சுசீந்திரன் ஸ்டைலில் ஜாலி முதற்பாதி சீரியஸ் பிற்பாதி திரைக்கதை. 


படமே ரெண்டாம் பாதியில் தான் ஆரம்பிக்கிறது. வில்லன் கூட்டத்தை பிடிக்க விஷால் போடும் ப்ளான்கள் அட. தொய்வில்லாத ரெண்டாம் பாதி படத்திற்கு பெரிய பலம் என்றாலும், மத்திய கைலாஷ் சிக்னலில் மாட்டிக்கொண்ட வண்டிபோல நகர மறுக்கின்ற முதற்பாதி பெரிய பலவீனம். எக்ஸ்பயரி ஆன காதல் காட்சிகள், மாஸ் ஏற்றாத ப்ளட்டான ஆக்சன் காட்சிகள்ன்னு டல் பாதி. 

கார் உள்ள உக்காந்து ஓட்டுங்கன்னு சொன்னா எங்க கேக்குறாரு!!


விஷால் கதாப்பாத்திரம் குழப்பமாகவே வடிவமைக்கப்பட்டது இன்னொரு மைனஸ். பிற்பாதி காட்சிகளில் கடமையில் சீரியஸாக இருக்கும் விஷால், முதற்பாதியில் காஜலை கண்டதும் காதல் வடையை வாயில் சுடுகிறார், பிறகு ரவுடிகளை துப்பாக்கியில் சுடுகிறார். இதையே மாற்றி மாற்றி சுடுகிறார், சாரி செய்கிறார். கூடவே வாரமலர், குமுதத்தில் வந்த புருஷன் -பொண்டாட்டி ஜோக்ஸ் எல்லாம் சேகரித்து எடுக்கப்பட்ட சூரியின் கொஞ்சமா சிரிக்க வைக்கும் நகைச்சுவை காட்சிகள். நான் மகான் அல்ல காதல் காட்சிகளை இப்போது பார்த்தாலும் போர் அடிக்காமல் போகும். படத்தின் இரண்டாம் பாதிக்கு அது பெரிய வலு கூட்டவில்லை என்றாலும், லவ் சீன்ஸ் படத்தின் வேகத்திற்கு ஒரு தடையாக இருந்ததில்லை. ஆனால் பாயும்புலியின் காதல் காட்சிகள் தண்ணி வரலைன்னு தொண்டுன போர விட சம போர். வீடே இல்லாதப்ப பெயிண்ட் அடிக்கிறவனுக்கு என்ன வேலங்கற  மாதிரி காஜல் அகர்வால் ரோல். பேசாம தமிழ் சினிமாவுல இது மாதிரி காதல் காட்சிகள் வைத்து பொறுமைய சோதிக்காம டைரக்ட்டா 'ஹீரோ-ஹீரோயின்' லவ் பண்ண ஆரம்பிச்சு ரெண்டு மாசம் இன்னியோட ஆச்சுன்னு ஆரம்பிக்கலாம். மொக்கைகேற்ற மகாமொக்கை மாதிரி மனதில் ஒட்டாத பாடல்கள். ஆனால் பின்னணி இசையில் ஈடு கட்டிருக்கிறார்  இமான்.


விஷாலின் அப்பா, சமுத்திரக்கனி என எல்லாரும் கொடுத்த கதாபாத்திரத்திற்கு கெடாமல் நடித்திருக்கிறார்கள். விஷாலிடம் தன் தலையில் கை வைத்து அழும் இடத்தில் கலங்கடித்து விடுகிறார்  விஷாலின் அப்பாவாக நடித்தவர். கனக்கச்சிதமான பாத்திரத்தேர்வு. எப்போதுமே ஒரு நடுத்தர வர்க்க குடும்ப அமைப்பை சிறப்பாக வடிவமைக்கும் சுசியின் டச் (நான் மகான் அல்ல - அப்பா, அம்மா தங்கச்சி பாசமான குடும்பம் , ஜீவா - அம்மா இறந்த பிறகு பக்கத்து வீட்டில் இன்னோர் பிள்ளையாக வளரும் ஹீரோ, அந்த குடும்பத்தின் பாசம் ) இதில் மிஸ்ஸிங். அதனால் தான் மேற்கூறிய படங்களில் அந்த குடும்பத்தில் ஏதேனும் ஒரு அசம்பாவிதம் நடந்தால் நாமும் பதறுவோம். நான் மகான் அல்லவில் கார்த்தியின் தந்தையை கொன்றவனை நாமும் அடிக்க வேண்டும் என்ற வெறி. தன் முதற்மகன் இறந்த உடன் பாரதிராஜா கலங்கும் இடத்தில், நமக்கும் அந்த சோகம் தொண்டையை அடைக்கும் உணர்வு - இதெல்லாம் நாம் பார்த்தோ, கேட்டோ இருந்த, நமக்கு நன்கு அறிமுகமான குடும்பத்தில் நடப்பதை போன்ற உணர்வை ஏற்படுத்தியதே சுசீயின் வெற்றி பார்முலா. முதற்பாதியில் மொக்கை காதல் காட்சிகளை நீக்கி, விஷால் குடும்ப செட்-அப்பை இன்னும் நன்றாக காட்டி இருந்தால், எமோசனல் க்ளைமாக்ஸ்க்கு பெரிய பலமாக அமைந்திருக்கும். சசுசீயின் வழக்கமான எண்டிங் இம்பாக்ட் பாயும் புலியில் இல்லாமல் ஏனோ தானோ என முடித்ததே பெரிய குறை.

பாயும் புலி - பாய்ச்சல் கம்மியான பழைய புலி

வருகைக்கு நன்றி!!

Blogger templates

Custom Search