Thursday, 25 October 2012

திருத்தணி விமர்சனம் – ஓம் பேரரசாயா நமக


இந்தியாவில் இருக்கும் போதே என்னை பெரிதும் கவர்ந்த ட்ரைலர், பிட்சா படகுழுவினரால் வெளியிடப்பட்டது. எப்படியாச்சும் இந்த படத்த பாத்தே ஆகணுங்க்ற எதிர்ப்பார்ப்பு. ஆனா என் கெட்ட நேரம், அதுக்குள்ள அமெரிக்காவுக்கு வந்துட்டேன். வலைத்தள குழுக்கள் மூலம் போன வாரம் படம் ரீலிஸ் ஆனது தெரிஞ்சு, தியேட்டரில் பாக்கலாம்ன்னா இங்கே மாற்றான், தாண்டவம் தான் ஓடிட்டு இருக்கு. தெரிஞ்சவன் எல்லாம் *த்தா பிச்சிட்டான்டா, *ம்மால கொன்னுட்டான்டா, மெர்சல் ஆஃப் த மெல்கிப்சன் பண்ணிட்டான்டான்னு நோட்டீஸ் அடிக்க, நமக்கோ எதிர்ப்பார்ப்புகள் ஷகிலாவை கண்ட கங்கா மாதிரி ஏறிப்போக, ஆன்லைன்ல பாத்திரலாம்டான்னு முடிவு பண்ணி, லிங்க அடிச்சா – வந்தான் பாருய்யா திருத்தணி. ஹாலிவுட் இயக்குனர்களுக்கே சவால் விடும் ஸ்டீவன் நோலன் பேரரசுவின் இயக்கத்தில், ரொம்ப நாளா ஆட்டம் காட்டி கடசியா ரீலிஸ் ஆயிடுச்சுங்கற சந்தோசம். கண்ணுக்குள்ள தலைவரோட முதல் ஷோ கொண்டாட்டம் தேங்கி நிக்க, பிட்சா கெடக்குதுன்னு திருத்தணிய ஓட வுட்டேன்…


ஒரு ஊருல பல ரவுடிங்க. அதுல பாதி பேர விஜய் திருப்பாச்சிலேயே போட்டுத் தள்ள, மீதி இருக்குற மிச்சத்தி சொச்சத்தி ரவுடிகள பரத் எப்டி போட்டு தள்ளுறாருங்க்ற கத தான் திருத்தணி. 


எடுத்த உடனே, எம்.ஜி.ஆர் பாட்டு பேக்ரவுண்டல ஓட, அவரோட மாண்டேஜ் விடியோஸ் காட்சிகளாக தெரிய, உள்ளுக்குள்ள சந்தேகம், ‘ஒரு வேள ஜெயா டீ.வி. போட்டுட்டேன்னா?’ன்னு. கதை திரைக்கதை பேரரசுன்னு வரலையேன்னு தயக்கத்தோட பாத்துட்டே இருக்கும் போது, ஒரு ரவுடி கூட்டம் தெரண்டு வர, இது தலைவர் படம் தான்டான்னு நிமிர்ந்து உக்காந்தேன். ஃபோட்டோ ஃப்ரேம்ல இருக்குற ஆளு செத்து போனதால, தீபாவளி கொண்டாட கூடாதுன்னு ஒரு தெருவையே அடிச்சு நொறுக்க, ஒரு வீட்ல மட்டும் ‘பட்டாசு வெடிச்சா தானே சத்தம் வரும்? நாம கம்பி மத்தாப்பு கொளுத்தலாம்’ன்னு ’என்னயும் நடிக்க வைங்க’ பாண்டியராஜன் ஐன்ஸ்ட்டீன் கணக்கா ஐடியா கொடுத்து, கொண்டாடும் போது புஸ்வானம் வெடிச்சு ரவுடிங்க காதுல விழ, அவங்க வழக்கம் போல அந்த வீட்ல இருக்குற ஒரு கன்னிப்பெண்ண தரதரன்னு இழுத்துட்டு வரும் போது, ஒரு அடி இல்ல இடி. என்னன்னு பார்த்தா இளைய தளபதி விஜய். இப்போ தானேய்யா நண்பன்ல நடிச்சு நல்ல பேரு வாங்குனியே தலைவா, திரும்பவும் மொதல்லருந்தான்னு ஜெர்க்காகி யோசிக்கும் போதே, அது சிவகாசி படத்துல இருந்து வெட்டப்பட்ட காட்சின்னு தெரிஞ்சு நிம்மதி பெருமூச்சு. (இதுக்கு தான் கெட்-அப் மாத்தி நடிக்கணும்ங்றது) அடுத்த ரெண்டாவது அடில்ல ஒஸ்தி சிம்பு ஒடம்போட பரத் வெரப்பா நிக்க, வழக்கம்போல அடி, ஒத, குத்து, பன்ச்சு, முருகன வேண்டிட்டு இண்ட்ரோ சாங்கு. 


தலைவர் படம்னாலே தொப்பி நமக்குதான்ஹீரோ அறிமுக பாட்டு முடிஞ்சா அடுத்து என்னங்கற  ஃபார்முலாக்கு விதிவிலக்கில்லாம, ஹீரோயின் எண்ட்ரி. சுனைனா அழகா இருக்காங்க, நல்லாவும் நடிக்கிறாங்க. ட்ரேயின்ங் யாரு, ‘பாரதிராஜா + பாலசந்தர்’ கலவை பேரரசு அல்லவா. வழக்கம் போல பொய் சொல்லி ஹீரோவ எமாத்த (சிவகாசி + திருத்தணி), பொது அறிவு இல்லாத ஹீரோ மம்தா பேனர்ஜி ஹீரோயினோட சொந்தக்காரங்க நெனச்சு எமாற, அப்டியே ராஜ்தானி எக்ஸ்ப்ரெஸ்ஸ காமெடி ட்ராக்ல ஓட்றாரு பேரரசு. அடக்கமுடியாத சிரிப்பு. அடுத்த மூணாவது ரீல்லேயே பித்தலாட்டத்த பரத் கண்டுபிடிச்சு, ஆதரவற்றோர் இல்லத்துல வளர்ந்த சுனைனா, கூட்டுக்குடும்பத்துல தான் வாக்கப்படுவேன்னு சொல்றத தெரிஞ்சிக்கிறாரு. பூனம்பாண்டே மாதிரி ரசிகர்கள ஆச காட்டி மோசம் பண்ணாம, ரசிகர்கள் எதிர்பார்த்த மாதிரியே பரத்தோட குடும்பத்துல ஐக்கியம் ஆயிடுறாங்க, ரொமாண்ட்டிக் பாட்டயும் போட்டுடுறாங்க.அடுத்து பெரிய ட்விஸ்ட்டா, வேறு பல எடங்களில் அநியாயம், அக்கிரமம் நடக்கும்போது, அங்கே பரத் இருந்தும் தட்டி கேக்க மாட்டேங்க்றாரு. அதே இடத்துல ‘அடிடா அவன, ஒடடா அவன’ன்னு நரம்ப முறுக்கிட்டு முதல் ஃபைட்ல வேடிக்க பார்த்த ‘நட்புக்காக’ ராஜ்கிரணும் அட்டெண்ட்டன்ஸ் போட, என்னடா இவன் கோககோலா பாட்டில் மாதிரி பொங்குவான்னு பாத்தா, ஸ்லைஸ் மாதிரி சாந்தமா போறான்னேன்னு கடுப்பாகுறாரு. இதுக்கு கண்டிப்பா ஒரு ஃப்ளாஸ்-பேக் இருக்குமேன்னு நாம யோசிக்கறுக்குள்ளேயே, நெஞ்ச வேரோடு புடுங்கி போடுற மாதிரி, கல் மனசையும் கரைய வைக்குற ஒரு ப்ளாஸ்-பேக்க போட்டு நம்பள நிலைகுலைய செய்றாரு பேரரசு. கொஞ்ச நேரத்துல பரத் விபத்துல சிக்க, ‘வெற்றி விழா’ படம் மாதிரி ஆயிடுமோன்னு திங்க் பண்ணும்போதே ’ தெய்வத்துக்கு சோதிக்க ஆளில்லையா?’ன்னு சோக பாட்ட போட்டு நம்பள இன்னும் தாக்குறாரு. படம் பாக்குறவங்க நமக்கே எழுதுன மாதிரி இருக்கேன்னு ஃபீல் பண்ணும் போதே, இன்னொரு ட்விஸ்ட்ட தந்து (அத நான் சொல்ல மாட்டேனே), ராஜ்கிரண் பரத்த கூட்டிட்டு போய் அர்ஜூனனுக்கு கீதா உபதேசம் செஞ்ச கிருஷ்ணன் மாதிரி, விவேக்கானந்தர், பகத்சிங், பாரதியார் இப்படி பலபேரோட வாழ்க்கை வரலாற்ற பாடமா எடுத்து ‘சாதிக்காம செத்தா தோளுல தூக்கிட்டு போவாங்க, சாதிச்சிட்டு செத்தா பூ..பூ… பூமால தூவி தூக்கிட்டு போவாங்க’ன்னு நரம்பு புடைக்கும் தத்துவத்த சொல்லி, பாலுவா இருக்குற பரத்த திருத்தணியா மாத்துறாரு. அதுக்காப்பாலிக்கா, திருத்தணி எப்படி வில்லன் கூடாரத்த அழிச்சான்னு தன்னோட டிப்பிக்கல் கமர்சியல் பஞ்சாமிர்தத்துல பேரிச்சம்பழ அரசியல்வாதி வில்லன், வாழப்பழ கரப்ட் போலீஸ், கற்கண்டு காமெடி போலீஸ், நெய் புத்திசாலி ஹீரோன்னு கலந்து கட்டிருக்காரு. கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலோடு எதிர்ப்பார்த்த தலைவரோட தரிசனம் ரெண்டாவது பாதில கிடைக்க, அரங்கமே அதிரும் கரகோஷத்த மனசுக்குள்ள இசச்சிகிட்டே ரசிச்சு பார்த்தேன். அதுவும் தலைவர் ‘திருத்தணி எல்லாம் தனி கார்டு, நீ அவன போய் தேடு’ன்னு வசனம் பேசும் போது *த்தா தலைவாவாவாவான்னு விசில் அடிச்சிட்டே, ரைமிங்கா எவனாச்சும் தலைவர திட்டிற கூடாதுன்னு பண்ணாத பிராத்தனை இல்லை. ‘டி.ஆர் சிம்புக்கு அப்பன்னா, நான் வம்புக்கு அப்பன்’ன்னு சொல்லிட்டு அவர் சிரிப்பாரே ஒரு சிரி, ச்ச. எல்லாமே எல்லாருக்கும் அமஞ்சிறாது. சிலதெல்லாம் தானா அமையணும். PROUD TO BE A PERARASUIST.பரத்த பத்தி பெருசா சொல்ல ஒண்ணுமில்ல. என்னோட முழு கவனமும் பேரரசுவோட இசை, வசனங்கள், திரைக்கதை இதுலேயே இருந்துச்சு. அமெரிக்காவுக்கே சவால் விடும் அளவுக்கு ’ என்னடா பில்லு பில்லு நீ என்ன பெரிய பில் க்ளின்டனா?’ங்ற வசனம் மூலமா பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு தலைவருக்கு கெடச்சா ஆச்சிரியப்படுவதற்கில்லை. ’ கண்ணகி மதுரைய தான் எரிப்பா, நாங்க நெனச்சா கண்ணகியே எரிப்போம்’ என்ற வசனத்தால் சிலப்பதிகாரத்தை கரைத்து குடித்த வாழும் இளங்கோ அடிகளாக கண்ணுக்கு தெரிந்தார். இசை சொல்லவே வேணாம், முதற்படம் என்று சொன்னா யாருமே நம்ப மாட்டாங்க. ரோஜா ஏ.ஆர்.ரகுமான், மின்னலே ஹாரிஸ் ஜெயராஜ், மூணு அனிருத் வரிசையில் பேரரசுவுக்கு திருத்தணி. ஆண்ட்ரியா உதட்டை கடிக்காமல், இசையில் கவனம் செலுத்துங்க தலைவா. குத்து, மெலடி, ராக், ஹிப்-ஹாப், சோகம்ன்னு வைரட்டியாக வாத்தியம் வாசித்து இருக்கிறார்.


கடைசி காட்சியில் பரத் ஒரு ஊரு பேரை சொல்ல, ‘தலைவரோட அடுத்த படத்துக்கு டைட்டில் கெடச்சாச்சு’ங்ற ரெட்டிப்பு சந்தோசத்தோட படத்த ரெண்டாவது தடவையா பாத்து முடிச்சேன். இனிமேலும் படையப்பா நீலாம்பரி மாதிரி பாத்துட்டே இருப்பேன். ஏனா IT’s A CLASSIC. தலைவா, இனிமேல் பரத், விஜய், அஜித்ன்னு லுச்சா பசங்க கூட படம் பண்ணாத, அடுத்த படத்துல நீ தான் ஹீரோவா நடிக்கணும், இது அனைத்துலக ஸ்டீவன் பேரரசு ரசிகர் மன்றம், அமெரிக்கா கிளை சார்ப்பா லட்சோப லட்சம் ரசிகர்களின் வேண்டுகோள்.

திருத்தணி – பாக்கலன்னா செத்துரு நீ


பூந்தோட்டத்துக்கே பூச்செண்டா? போங்க பாஸ்


வருகைக்கு நன்றி!! 

No comments:

Blogger templates

Custom Search