Saturday, 3 October 2015

புலி - ரசிகனின் வலி

காலை காட்சி கேன்சல், ஓவர்சீஸ்க்கு கீ வரல, இன்கம் டாக்ஸ் ரைடு, ரிலீஸ் ஆகுமா ஆகாதான்னு பல மணி நேர ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்க்கு பிறகு ஹே புலி புலி புலி புலி புலி புலி புலி புலின்னு D.S.P  குரலில் (பின்ன, நமக்கென்ன S.P.B குரலா) பாடிக்கிட்டே வெறியோட டிக்கெட் வாங்கிட்டு படத்துக்கு போனா - படத்துல இருந்து மீமே (Meme) எடுத்து பாத்துருக்கேன், ஆனா இவனுங்க மீமேவையே முழு படமா எடுத்து வச்சிருக்காங்க.  
ஆற்றுல வர கூடை - கூடைல ஒரு குழந்தை - அந்த குழந்தையே நீங்க தான் விஜய் சார்ன்னு படம் ஆரம்பிக்குது. இந்த குழந்தை ஒரு இலைய சாப்டணும், ஏனா அவரு இலை(ளை)ய தளபதி. அந்த குழந்தையும் மக்களும் வளர்ல ஊருல கொடுங்கோல் ஆட்சி நடக்குது. எப்டி பாசத்துக்கு முன்னாடி பாப்பாவா இருக்குற விஜய் வளர்ந்து பகைக்கு முன்னாடி டாப்பா ஜெயிச்சி வராரு தான் கொர்ர்ர்ர்ர்ர்... புலி. விஜய் பாராட்டியே ஆகணும் - என்ன Gutsடா, வேற Genreலா ட்ரை பண்றாருன்னு, கடசீல பாத்தா அதே அஞ்சு பாட்டு, மூணு பைட்டு Template படம் தான். அட அறிவாளி பாடிசோடா, வீடு வெளிய புது பெய்ன்ட் அடிச்சிட்டு, உள்ள அதே அழுக்க தான்டா வச்சிருக்கீங்க.

 விஜய் படம் நல்லா இல்லனாலும் 'விஜய்காக ஒன்ஸ் பாக்லாம்'ன்னு சொல்லி மனச தேத்திப்போம். ஆனா இங்க படத்துக்கு மிகப்பெரிய மைனஸ் விஜய் தான். குமார் மெஸ்ல மூச்சு முட்ட தின்னுட்டு, செரிச்சும் செரிக்காமலும்  'ஆ.ஆஆஆ ... து வந்து', 'பிபிபிபிபின்ன்ன்... ன என்ன சொல்ல'ன்னு வாய்ஸ் மாடுலேசன்ல பேசுறது, சிக்கிலிக்கா பண்ணி விட்ட மாதிரி, வளஞ்சி குழைஞ்சி ஆடிட்டே நடிக்கறது - இதெல்லாம் க்யூட், குழைந்தைகள் ரசிப்பாங்கன்னு இன்னும் எத்தன காலத்துக்கு நம்பி, இத திரும்ப திரும்ப பண்ணி நம்பள இம்ச செய்ய போறாரு தெரில. கத்தில கூட முதற்பாதில கொஞ்ச நேரம் தான் இப்டி செ.செ.வ.கு. ஆனா புலில முழு படமும் ஐயோ ராமா. பத்தாததுக்கு அரசியல் ஆசைக்கு தூபம் போடுற காட்சிகள், வசனங்கள். இதுக்கு மேல எங்களால முடியாதுப்பான்னு இருக்றப்ப, சங்கிலி முருகன் விஜய்ய தனியா கூட்டிட்டு போய் 'உங்கப்பா யாருன்னு தெரியுமா?'ன்னு இன்னொரு விஜய்ய அறிமுகப்படுத்துறார். சிரிக்கறதா, அழுவறதான்னு நமக்கே குழப்பம் வர மாதிரி ஐடெக்ஸ் மையில் தீட்டிய மீசை, கொஞ்சமும் செட் ஆகாத தொடப்ப குச்சி விக்கோட வராரு. வில்லு அப்பா கெட்-அப் தொத்றுச்சு. என்ன கொடும மேஜர் சரவணன் இது. வாயில வந்த கொட்டாவி முடியறதுகுள்ளேயே பிளாஷ்பாக் ஓவர்.  ஆதிகாலத்து படங்கறதால 'ஆதி' காலத்து பிளாஷ்பாக் - அவ்ளோ கொடூரம்.  இதுல விஜய் வேற வரவே வராத மாடுலேசன்ல முக்கி முக்கி கத்தி கத்தி அரசியல் டயலாக் அடிக்றாரு. அண்ணா, ப்ளீஸ்ன்னா. இதுக்கு நீங்க முழு நீள அரசியல் படமே பண்ணிட்டு போயிருங்க.

கதாநாயகிகள் எதுக்குனே தெரில. ஸ்ருதிஹாசன் நாக்குல தமிழ் உச்சரிப்பு அவர் பாட்டுல ஆடுறத விட நல்லா ஆடுது. தெரியாத்தனமா விஜய் கிட்ட  'எழக்கறுதுன்னா என்னையே எழக்குறேன்'ன்னு சொல்லிடறாங்க. அதுனால படம் புல்லா படுத்துட்டே இருக்காங்க, ஐ மீன் ஸ்ரீதேவி போட்ட மயக்கத்துல - ச்லீபிங் பியுட்டி (Sleeping Beauty). ஹன்சிகா ஏன் படத்துல இருக்காங்கன்னு அவங்களுக்கே தெரியல. நம்ப கல்யாண ரீசப்சன்ல ஆடும் நண்பர்கள் போல , ரெண்டு பாட்டுக்கு ஆடிட்டு போயிடறாங்க. நந்திதா, ஐயோ பாவம் - 'ஆஆஆஆஆ'ன்னு இந்த ஒரு வசனத்த கத்துவதற்க்கே வராங்க. இவர்கள் மத்தியில் கொடுத்த கதாபாத்திரத்தை கெடுக்காமல், அதுக்குரிய கம்பீரத்தையும், பயமூட்டும் உடல்மொழியோடு கச்சிதமாக நடித்திருக்கிறார் ஸ்ரீதேவி. விஜய் இன்ட்ரோ விட இவங்களுக்கு கெத்து இன்ட்ரோ. படத்தின் மிகப்பெரிய பலமே இவர் வரும் ரெண்டாம் பாதி காட்சிகள் தான். நான் ஈ ல கலக்குன சுதீப்,  பின்னாடி ஆபரேஷன் பண்ண மாதிரி சைடா தூக்கி உக்கார்ந்து போஸ் மட்டும் கொடுக்றாரு.

படம் நல்லா Flowல பிக்-அப் ஆகுற டைம்ல பாடல்கள் சென்னை ரோட்ல வந்த போந்து மாதிரி, பயணத்தையே கெடுக்குது. சித்திரகுள்ளர்கள் ஊரை அறிமுகப்படுத்தி பிரம்மிக்க வைத்த அதே நேரம், அங்கேயும் நமது தளபதி ஜிங்கிலியா ஜிங்கிலியா குத்து பாட்டுக்கு ஆடறாரு. ரெண்டாவது பாதியில் ஸ்ரீதேவி அற்புதமான அறிமுகத்திற்கு பிறகு மன்னவனே பாடல், விஜய்க்கு மாஸா ஒரு சீன் வைத்து, சம்பந்தமே இல்லாம சொட்ட வாழ சொட்ட வாழன்னு இன்னொரு குத்து பாட்டு. நடனமாச்சும் ஆறுதல் என்று நினைத்தால், ஸ்டெப்ஸ் எல்லாம் சொல்ல முடியாத அளவுக்கு - ஒத்த கால தூக்கிட்டு எதையோ பாத்து ஓடுற ஸ்டெப், தொடைய தூக்கி பின்னாடி இருந்து கைய வுட்டு - ஐயோ தளபதி, என் இப்டி? கெட்ட கனவாக மறக்க நினைக்கும் இன்ட்ரோ சாங். பாடல்களில் ஒரே ஆறுதல் ஆடியோவில் இருந்த மனிதா மனிதா பாடல் படத்தில் இல்லை. எல்லாமே மொக்கையா போயிட்டு இருக்கும் போது பின்னணி இசையும் பெருசா கவனத்தை கவர்ர மாதிரி இல்ல.


நாங்க வேணா முருகதாஸ், ஷங்கர் கிட்ட பேசி இன்னொரு படம் பண்ண சொல்லவா, தம்பி?

விஜய் ரசிகானாக ஏமாற்றம் அடைந்ததை விட, சிம்புதேவன் ரசிகனாக கிடைத்த ஏமாற்றமே அதிகம். இம்சை அரசன், அறை என், இரும்பு கோட்டை, ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும் என Creativeவாக யோசித்து ரசிக்கும்படியான திரைக்கதை அமைத்தவர். ஒரு Established பெரிய இயக்குனராக இல்லாவிட்டாலும், ஜனரஞ்சக ரசிகர் கூட்டம் (Fan Following) இல்லாவிடினும் வித்தியாசமான காட்சி அமைப்பிற்கு பெயர் போனவர். கதைகென்று பெரிதாக மெனக்கெடாமல், திரைக்கதையில் இருக்கும் பாண்டஸி, அரசியல் நையாண்டி ,  சின்ன சின்ன நகைச்சுவை என்று படம் பார்ப்பவர்களை கவரும் அம்சங்கள் பல. உதாரணம் - இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் பழக்கப்பட்ட கவ்-பாய் கதையாக இருந்தாலும், அதில் வரும் விஷயங்கள் அட போட வைக்கும். ஜெய்சங்கர்புரம், அசோகபுரம்  என்று கிராமங்களுக்கு பெயர், கவ்-பாய் தொப்பி போட்ட கோயில் ஐயர், காபி-டே வெளியே வடை போடும் டீக்கடை, கிழக்குகட்டை (Eastwood) என்று கதாபாத்திரத்துக்கு பெயர், கோர்ட்டில் காந்தி படத்திற்கு பதிலாக அமிதாப் படம், வில்லன் இருக்கும் ஊருக்கு அமெரிக்கா பின்னணியில் காட்சிகள் வைத்து அணுகுண்டு ஒப்பந்தம், அமேரிக்கா ஏகாபத்தியத்தை கலாய்ப்பது என கவனத்தை ஈர்க்கும் விஷயங்கள் பல. அப்படி  Creative ஆன ஆளு, விஜய்யோடு இணையும் போது , அதுவும் பாண்டஸி படம் என்னும் போது - நாம் எதிர்பார்த்த விஜய் Trademarkகும் இல்லை, சிம்புதேவன் Trademarkகும் இல்லை. 
பாண்டஸி படம் எடுப்பதா இல்லை விஜய் ஸ்டைலில் மாஸ் படம் எடுப்பதா என குழம்பி குடிகாரனை போல் தள்ளாடும் திரைக்கதை அமைத்து கோட்டை விட்டு விட்டார். நகைச்சுவையில் பெருசாக ஸ்கோர் செய்யும் இருவரும் - Unintentional காமடியில் பாலுக்கு பால் சிக்ஸர் அடிக்கின்றனர். முதற்பாதி அரை மணி நேரம் ப்ளாட். வேதாளகோட்டையை தேடி விஜய் பயணிக்கும் காட்சிகள், சித்திரக்குள்ளர்கள் ஊர், ஆல்பர்ட் - அல்பா, பீட்டர் - பீட்டா, காமாட்சி- காமா என்று அவர்களின் பெயர்கள், வேர்கடலை ஓட்டில் மார்கச்சை என இடைவேளை வரை தான் நமக்கு தெரிந்த சிம்புதேவன் அங்கங்கு எட்டி பார்க்கிறார். இரண்டாம் பாதியும் ஸ்டீவர்ட் பின்னி பந்து வீச்சை போல் மிதவேகத்தில் தங்குதடை இன்றி செல்கிறது. பிளாஷ்பாக் ஆரம்பத்தில் அதள பாதளத்தில் விழுந்த படம், அதிலிருந்து எழவே இல்லை. அதுவும் மந்திரவாதி, சாகவரம், All Out Mosquito Repellant மோதிரம் என்று ராமநாராயணன் - ராம்கி  - கரண் படம் பார்த்த பீல். பாண்டஸி படத்தில் லாஜிக் பார்ப்பது மடத்தனம் தான். அனால் அபத்த காட்சிகள் இருந்தால் என்ன செய்ய? உதாரணம் : கோட்டைக்கு வந்த ஒடனே ஏதோ ஐ.டி கம்பெனி லிப்ட் ஏறி பதினெட்டாவது மாடிக்கு செல்வது போல, சுலபமாக விஜய் போய் ஸ்ருதிஹாசனை பார்ப்பது. பிளாஷ்பாக் கிளைக்கதை என்ற ஒன்றே இல்லாமல், இரண்டாம் பாதி முழுக்க, விஜய்-சுதீப்-ஸ்ரீதேவி இவர்களை சுற்றி காட்சிகளை வைத்து, விஜய் ஸ்ருதியை கண்டுபிடிக்க சிலபல சிரமங்கள், சுதீப்-ஸ்ரீதேவியிடம் மாட்டிக்கொள்ளாமல் ஆள்மாரட்ட ஆட்டத்தை தொடர்வது என சுவாரசிய திரைக்கதையை நகர்த்தி இருக்கலாம் - விஜய்யின் அரசியல் ஆசைக்கு பலிகடா ஆகாமல்.

நல்ல காஸ்ட், பிரம்மாண்ட உழைப்பை கொட்டிய கலை இயக்குனர் டீம், நட்டியின் சூப்பர் ஒளிப்பதிவு, இதெல்லாம் இயக்குனர் சிம்புதேவன் வேஸ்ட் பண்ணிடாருன்னு தான் சொல்லணும். அவர மட்டும் குறை சொல்லி என்ன பிரயோஜனம். தோனிக்கு கிடைத்த ஜத்து மாதிரி, இவருக்கு விஜய். பெரிய ஸ்டார் இல்லாத அடுத்த படத்தில் சிம்புதேவன் கலக்குவார், 'என் பேச்ச கேட்டு மூடிட்டு நடிங்க'ன்னு Controlல வச்சிக்குற இயக்குனர் படத்தில் விஜய் பட்டய கெளப்புவார் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்.

புலி - வெய்டிங் அட்'லி'


வருகைக்கு நன்றி!!

Saturday, 5 September 2015

பாயும் புலி - குறி மிஸ்

பாண்டியநாடு வெற்றிக்கு பிறகு விஷால் - சுசீந்திரனின் கூட்டணியில் வெளிவந்துருக்கும் திரைப்படம். பணம் பிடிங்கும் ஈவு இரக்கமற்ற கடத்தல் கும்பலிடம் இருந்து தொழிலதிபர்களை காப்பாற்றும் நேர்மையான போலீஸ் என்கிற இட்லியை பேமிலி செண்டிமெண்ட் சாம்பாரில் முக்கி எடுத்த கதை. சுசீந்திரன் ஸ்டைலில் ஜாலி முதற்பாதி சீரியஸ் பிற்பாதி திரைக்கதை. 


படமே ரெண்டாம் பாதியில் தான் ஆரம்பிக்கிறது. வில்லன் கூட்டத்தை பிடிக்க விஷால் போடும் ப்ளான்கள் அட. தொய்வில்லாத ரெண்டாம் பாதி படத்திற்கு பெரிய பலம் என்றாலும், மத்திய கைலாஷ் சிக்னலில் மாட்டிக்கொண்ட வண்டிபோல நகர மறுக்கின்ற முதற்பாதி பெரிய பலவீனம். எக்ஸ்பயரி ஆன காதல் காட்சிகள், மாஸ் ஏற்றாத ப்ளட்டான ஆக்சன் காட்சிகள்ன்னு டல் பாதி. 

கார் உள்ள உக்காந்து ஓட்டுங்கன்னு சொன்னா எங்க கேக்குறாரு!!


விஷால் கதாப்பாத்திரம் குழப்பமாகவே வடிவமைக்கப்பட்டது இன்னொரு மைனஸ். பிற்பாதி காட்சிகளில் கடமையில் சீரியஸாக இருக்கும் விஷால், முதற்பாதியில் காஜலை கண்டதும் காதல் வடையை வாயில் சுடுகிறார், பிறகு ரவுடிகளை துப்பாக்கியில் சுடுகிறார். இதையே மாற்றி மாற்றி சுடுகிறார், சாரி செய்கிறார். கூடவே வாரமலர், குமுதத்தில் வந்த புருஷன் -பொண்டாட்டி ஜோக்ஸ் எல்லாம் சேகரித்து எடுக்கப்பட்ட சூரியின் கொஞ்சமா சிரிக்க வைக்கும் நகைச்சுவை காட்சிகள். நான் மகான் அல்ல காதல் காட்சிகளை இப்போது பார்த்தாலும் போர் அடிக்காமல் போகும். படத்தின் இரண்டாம் பாதிக்கு அது பெரிய வலு கூட்டவில்லை என்றாலும், லவ் சீன்ஸ் படத்தின் வேகத்திற்கு ஒரு தடையாக இருந்ததில்லை. ஆனால் பாயும்புலியின் காதல் காட்சிகள் தண்ணி வரலைன்னு தொண்டுன போர விட சம போர். வீடே இல்லாதப்ப பெயிண்ட் அடிக்கிறவனுக்கு என்ன வேலங்கற  மாதிரி காஜல் அகர்வால் ரோல். பேசாம தமிழ் சினிமாவுல இது மாதிரி காதல் காட்சிகள் வைத்து பொறுமைய சோதிக்காம டைரக்ட்டா 'ஹீரோ-ஹீரோயின்' லவ் பண்ண ஆரம்பிச்சு ரெண்டு மாசம் இன்னியோட ஆச்சுன்னு ஆரம்பிக்கலாம். மொக்கைகேற்ற மகாமொக்கை மாதிரி மனதில் ஒட்டாத பாடல்கள். ஆனால் பின்னணி இசையில் ஈடு கட்டிருக்கிறார்  இமான்.


விஷாலின் அப்பா, சமுத்திரக்கனி என எல்லாரும் கொடுத்த கதாபாத்திரத்திற்கு கெடாமல் நடித்திருக்கிறார்கள். விஷாலிடம் தன் தலையில் கை வைத்து அழும் இடத்தில் கலங்கடித்து விடுகிறார்  விஷாலின் அப்பாவாக நடித்தவர். கனக்கச்சிதமான பாத்திரத்தேர்வு. எப்போதுமே ஒரு நடுத்தர வர்க்க குடும்ப அமைப்பை சிறப்பாக வடிவமைக்கும் சுசியின் டச் (நான் மகான் அல்ல - அப்பா, அம்மா தங்கச்சி பாசமான குடும்பம் , ஜீவா - அம்மா இறந்த பிறகு பக்கத்து வீட்டில் இன்னோர் பிள்ளையாக வளரும் ஹீரோ, அந்த குடும்பத்தின் பாசம் ) இதில் மிஸ்ஸிங். அதனால் தான் மேற்கூறிய படங்களில் அந்த குடும்பத்தில் ஏதேனும் ஒரு அசம்பாவிதம் நடந்தால் நாமும் பதறுவோம். நான் மகான் அல்லவில் கார்த்தியின் தந்தையை கொன்றவனை நாமும் அடிக்க வேண்டும் என்ற வெறி. தன் முதற்மகன் இறந்த உடன் பாரதிராஜா கலங்கும் இடத்தில், நமக்கும் அந்த சோகம் தொண்டையை அடைக்கும் உணர்வு - இதெல்லாம் நாம் பார்த்தோ, கேட்டோ இருந்த, நமக்கு நன்கு அறிமுகமான குடும்பத்தில் நடப்பதை போன்ற உணர்வை ஏற்படுத்தியதே சுசீயின் வெற்றி பார்முலா. முதற்பாதியில் மொக்கை காதல் காட்சிகளை நீக்கி, விஷால் குடும்ப செட்-அப்பை இன்னும் நன்றாக காட்டி இருந்தால், எமோசனல் க்ளைமாக்ஸ்க்கு பெரிய பலமாக அமைந்திருக்கும். சசுசீயின் வழக்கமான எண்டிங் இம்பாக்ட் பாயும் புலியில் இல்லாமல் ஏனோ தானோ என முடித்ததே பெரிய குறை.

பாயும் புலி - பாய்ச்சல் கம்மியான பழைய புலி

வருகைக்கு நன்றி!!

Monday, 2 March 2015

காக்கி சட்டை - டமால் டுமீல் சிவகார்த்திகேயன்

தமிழ்நாட்டுல காலங்காலமா  இருக்குற காண்டோபோபியாங்கற நோய்க்கு புது வைரஸ்ஸா சேர்ந்து இருக்காரு சிவகார்த்திகேயன். நடிக்கிற படம் எல்லாமே மொக்கையா தான் இருக்கு, ஆனா இவன் படம் மட்டும் எப்டி ஓடுதுன்னு சந்தேகம். நாலஞ்சி வருசத்துக்கு முன்னாடி நம்பள இண்டர்வியு எடுத்தவன், மிமிக்ரி பண்ணவன்லா இன்னிக்கி நம்ப படத்த விட பெரிய பிசினஸ் பண்றான்னு வயித்தெரிச்சல். அனிருத் - தனுஷ் இல்லன்னா காத்து இல்லாத Lays சிப்ஸ் பாக்கெட் மாதிரி தான்னு விமர்சனங்கள் இருந்தாலும் , இன்னிக்கி தமிழ் சினிமால தவிர்க்க முடியாத ஒரு ஹீரோவா வளந்துருக்காரு. சிவகார்த்திகேயனின் திறமையை பார்த்து தனுஷ் அவருக்கு தந்த வாய்ப்பு, ஒரு கேட்-பாஸ் மாதிரி.. ஆனா உள்ள நுழைஞ்ச எல்லாருமே சாதிச்சித்தடா இல்ல. சிலபல வாரிசு நடிகர்களே எடுத்துக்காட்டா இருக்காங்க.. தனுஷ் ஒரு அடையாளம் கொடுத்தாலும் , தனது திறமையாலும் உழைப்பாலும் தான் இந்த அங்கீகாரம் கெடச்சிருக்கு. இப்பவும் போர் அடிக்கும் போதோ இல்ல சோகமா இருக்கும் போதோ அவரோட ஜோடி Bloopers பாத்துட்டு இருப்பேன். சேனல் மாத்தும் போதோ இல்ல சமைக்கும் போதோ சிவகார்த்திகேயன் குரல கேட்டா, 'டேய் அந்த சேனலே வை. சிவகார்த்திகேயன் பேசுறான்ல, ஜாலியா இருக்கும்'ன்னு சொல்ற தமிழ் குடும்பங்கள திரை அரங்குக்கு வர வச்சது தான் சிவகார்த்திகேயனோட சக்சஸ் பார்முலா. இன்னும் மிமிக்ரி ஆர்டிஸ்ட் மாதிரி தான் இருக்கான், டான்சே வரல, ஹீரோ லுக்கே இல்லன்னு தன்மேல் சொல்ல பட்ட எல்லா குறைகளையும் ஒவ்வொரு படத்தின் மூலமா பதிலா சொல்லிட்டு இருக்காரு. தன்னோட பிளஸ் என்ன, அத ரசிக்கிற மாதிரி எப்டி பண்றதுன்னு கரெக்டா தெரிஞ்சி வச்சிருக்குற சிவகார்த்திகேயன், எவ்ளோ நாள் தான் Startersயே சமைக்கறது , Main-Course போக வேணாமான்னு குதிச்சிருக்குற ஆக்க்ஷன்-கோதா தான் காக்கி சட்டை. பல மாஸ் -ஹீரோஸ் சரித்திரத்த புரட்டாசி மாசத்துல புரட்டி பாத்தா போலீஸ் படம் ஒரு திருப்பு முனையா இருந்துருக்கும். என்ன பண்றது, சின்ன வயசுல நாமளே தீபாவளிக்கு பொம்ம துப்பாக்கி வச்சி போலீஸ்ன்னு பீலுல சுத்தும் போது , நம்ப கதாநாயகர்களுக்கும் இருக்காதா? இந்த படம் சிவகார்த்திகேயன்க்கு Turning pointடா இல அடி வாங்கி பூசின Ointmenta?

படம் ஆரம்பிச்ச ஒடனே எக்கச்சக்க பில்ட்-அப்போட சிவாகே இன்ட்ரோ. 'அடடா இவனும் ஆரம்பிச்சிடானா, ஸ்கரீன கிழிச்சிட்டு வந்து நம்பள அடிக்காம உட மாட்டான் போல'ன்னு நெனைக்கும் போதே அத காமெடி ட்விஸ்ட்டா மாத்தி அட போட வச்சாரு டைரக்டரு.. ஒரு டம்மி Constable எப்டி வில்லனோட வண்டவாலத்த தண்டவாளம் தாண்டி, அவன தோக்கடிச்சி இன்ஸ்பெக்டர் ஆகுறாருங்கற பாக்யராஜ் காலத்து ஒன்-லைனர். வழக்கமான மசாலா படமா இல்லாம ஒரே ஒரு ஸ்டன்ட் , மொத்த படத்துலயும் ஹீரோக்கு ஒரே ஒரு பஞ்ச் தான்.. இப்டி ஓவர்-டோஸ் இல்லாம இருக்குற கமர்சியல் ஐட்டம்ஸ் படத்துக்கு பிளஸ்ஸா இருக்குற மாதிரி மைனசாவும் இருக்கு.. செமயா பில்ட் பண்ண வில்லன எதிர்க்கும் போது ஹீரோயிசத்த தூக்கி காட்டற மாதிரியோ இல்ல தூக்கி நிருத்துற மாதிரியோ (நோ டபுள் மீனிங்ஸ்) ரெண்டு-மூணு சீன்ஸ் ஆவது இருக்கணும். பட் Underplay பண்றேன்னு சில இடங்கள்ல நமுத்து போன பட்டாசா டம்மி ஆக்கிடுது. இதுனால மாஸ் சீன்ஸ்லா நம்ப மைண்ட்ல ரெஜிஸ்டர் ஆக மாட்டேங்குது. ஆங்கிலத்துல சொல்ற மாதிரி Goosebumps மிஸ்ஸிங்.. வில்லன அடிச்சி தான் ஹீரோயிசம் காட்டணும்ன்னு இல்ல, இவன் அவன லாக் பண்றது, அவன் இவன புத்திசாலி தனமா மடக்கற்துன்னு கூட காட்டிருக்கலாம். அது மாதிரி ரெண்டு மூணு சீன்ஸ் பரபரப்பா போயிட்டு இருக்கும் போது தான், ஏதாச்சும் மொக்க சீன்ஸ் நடுவுல வந்து ப்லோவ்வையே கெடுக்குது.. முதற்பாதி வரைக்கும் ஆஸ்திரேலியா டெஸ்ட் சீரீஸ் சிக்கர் தவான் மாதிரி கத நிக்கவே மாட்டேன்னு அடம்பிடிக்குது..

இவ்ளோ திரைக்கதை ஓட்டை இருந்தும், எல்லாத்தையும் ஒத்த ஆளா அடைக்குறாரு சிவகார்த்திகேயன். நாம அடுத்த லெவல்க்கு போகணும், விட்ராதடா தம்பின்னு பின்னி பெடல் எடுத்துருக்காரு. மான்-கராத்தேல நடிச்ச மாதிரி ஈஈன்னு இளிச்சுட்டு, ஆக்சன் சீன்ஸ்ல கூட காமெடி பண்ணிட்டு எரிச்சல கெளப்பாம, இதுல ரொம்ப Confidentடாவே நடிச்சிருக்காரு.. தனது டைமிங் காமெடில சிரிச்சா போச்சுன்னு சிக்ளிக்கா மூட்ற சிவாகே , ஆக்ஸன் காட்சிகளில் மட்டும் குரூப்ல டூப்னு மாட்டிக்றாரு. இன்னும் சண்டை காட்சிகளில் பாடி லாங்குவேஜ் Improve பண்ணனும் பாஸ். எல்லா நாளும் ஸ்லோ-மோ கேமரா + அனிருத் இசை காப்பாத்திறாது. படத்தோட அடுத்த ப்ளஸ் அனிருத். பாடல்கள் ரசிக்கிற மாதிரி இல்லனாலும் (பாடல் வர Situation எல்லாம் கண்றாவி , அதுனாலேயே புடிக்காம போயிருச்சு) பின்னணி இசை மெரட்டல். என்ன தான் மேக்-புக்ல மியூசிக் போடுறான்னு கலாய்ச்சாலும் (அப்போ உன்கிட்ட மேக்-புக் கொடுத்தா போட்டு கிழிச்சிர்வியான்னு கேக்க கூடாது), மாஸ் படத்துக்கு என்ன வேணும் , அந்த சீனுக்கு எந்த மாதிரி இசை வச்சா, எப்டி Elevate பண்ணும்ன்னு கரெக்டா வச்சிருக்காரு.. வி.ஐ.பி, கத்தின்னு அனிருத் பின்னணி இசை அந்தந்த படங்களுக்கு பெரிய பலமா இருக்கு..

மழைல பைட் வச்சா தெரி தெரிக்கும்னு டைரெக்டர்கிட்ட எவன் சொன்னானோ?


ஹீரோயின் ஸ்ரீதிவ்யா வழக்கம் போல ஹீரோவால கண்டுபிடிக்க முடியாத வில்லனோட எல்லா Detailsயயும் ஹீரோக்கு முன்னாடியே கண்டுபிடிச்சி அவர்கிட்ட சொல்ல போய் , அடியாள் கிட்ட மாட்டி அடி வாங்கி, அப்றோம் அவங்க ஹீரோ கிட்ட மிதி வாங்கி முடிச்ச ஒடனே, ஹீரோ கூட சேர்ந்து பாட்டு பாடி டான்ஸ் ஆடுற ரோல கச்சிதமா செஞ்சி இருக்காங்க.. பிரபுவும் அவரோட ஸ்ட்ரிக்ட் - அட்வைஸ் - நானும் நல்லவன் - சாவுக்கு பயமில்லன்னு டயலாக் பேசிட்டு செத்து போற ரோல சிறப்பா செஞ்சிருக்காரு.. அவர மாதிரியே ஆரம்பத்துலேயே இவன் நல்லவன், எப்டியாச்சும் செத்ருவான்னு தெரியுற Charactersசும் நம்ப எதிர்ப்பார்ப்ப ஏமாத்தாம நடு நடுவுல செத்து போய் மனச கனமாக்க ட்ரை பண்ணிருக்காங்க.. இமான் அண்ணாச்சி அங்கங்க சிக்ளிக்கா மூட்டி இருக்காரு.. ஸ்ரீதிவ்யா வீட்டில் பேசுற காட்சியில் கல்பனா நல்லா ஸ்கோர் பண்ணிருக்காங்க.. ரொம்ப பாவமா இருந்தது வில்லன் தான் . நல்லா 2-3 காட்சில எத்தி வுட்டுட்டு கடசீல கலகலப்பு இளவரசு மாதிரி மொக்க ஆக்கிட்டாங்க பாவம்..

விஜய் முத தரவ திருப்பாச்சி பண்ணும் போது, ரசிச்சோம்.. அப்றோம் சிவகாசி பண்ணும் போது லைட்டா யோசிச்சோம்.. திரும்ப அதையே பண்ண பண்ண காண்டாகி துப்பிட்டோம். எல்லா ஹீரோஸ்ஸுக்கும் ஒரு Saturation Point வரும்.. சிவகார்த்திகேயன்க்கு இன்னும் அது வரலங்கறது பெரிய பலம். தியேட்டர் வந்தோமா, ஜாலியா 2.30 மணி நேரம் போச்சா, சிரிச்சோமா என்ஜாய் பண்ணோமா, கவலைய மறந்தோமான்னு வந்துட்டே இருக்ற Fans தான் இதே மாதிரி 2-3 படங்கள் தொடர்ந்து பண்ணா புறக்கணிக்க ஆரம்பிப்பாங்க.. விமலா கூட கமலா தியேட்டர்ல கூத்தடிக்கிற போலீசா இல்லாம இதுல எல்லாரையும் நல்லவங்களா காமிச்சது ஹட்ஸ்-ஆப் (இந்த சிஸ்டம் தப்பு தான், பட் அட்ஜஸ்ட் பண்ணி தான் இருக்கனும்ன்னு ) . அதே மாதிரி வடமாநிலத்துல இருந்து வரவங்க படுற கஷ்டத்தையும் லைட்டா -டச் பண்ணிருக்காரு. உடல் உறுப்பு தானம் Fraudaயும் லைட்டா டச் பண்ணிருக்காரு.. இப்டி சரக்குக்கு கெடச்ச ஊர்க்காவா எல்லாத்தையும் லைட்டா டச் பண்ணியே மத்த விஷயத்துல கோட்ட வுட்டுட்டாரு..  ஒரு சில ஹீரோக்கள் படத்துலயும் சரி, நெஜ வாழ்க்கையிலும் சரி அவங்க ஜெயிக்கும் போது நாமளே ஜெயிச்ச பீல்ல இருப்போம்.. உங்க மேல நெறைய எதிர்ப்பார்ப்பு இருக்கு.. நம்ப பிகரையே டெய்லி ஒரே ட்ரெஸ்ல பாத்தா போர் அடிச்சிரும். சோ அடுத்த படத்துல திரைக்கதைக்கும் கொஞ்ச முக்கியத்துவம் கொடுத்து 'சிவகார்த்திகேயன்காக ஒன்ஸ் பாக்கலாம்'ங்கறத மாத்துங்க.. வாழ்த்துக்கள் :)

காக்கி சட்டை - குறை இருந்தாலும் கரை இல்லை , தாராளமா ஒன்ஸ் போட்டு பாக்கலாம்


வருகைக்கு நன்றி!!


 

Thursday, 15 January 2015

ஐ - விமர்சனம்


சோசியல் மெசேஜ் வச்சு படம் எடுத்தா, "இந்த ஆளுக்கு வேற படமே எடுக்க தெரியாது போல, எப்ப பாரு எச்ச துப்புனா தண்டன, லஞ்சம் வாங்குனா தண்டனன்னே எடுத்துட்டு இருக்கான்"ன்னு குற கண்டுபிடிப்பாங்க. சரி சாப்டு பேசுனா சாப்டு பேசுவோம், சகட்டுமேனிக்கு பேசினா வேற மாதிரி பேசுவோம்ன்னு அபூர்வ சகோதரர்கள் மீட்ஸ் அந்நியன்னு எடுக்கலாம்ன்னு ஷங்கர் கோதாவுல குதிச்ச ஐ - மெரிசல்லா இல்ல குடைச்சல்லா?உண்மையான காதல்ன்னா உமா ரியாஸ்ஸயே கொடுப்பேன்னு ஷங்கர் என்னும் இயக்குநரை நம்பி, சிக்ஸ்-பேக்ல இருந்து  ஹன்ச்-பேக்  வரைக்கும் ஒடம்பு தேய தன்னை வருத்திக்கொண்டு உழைப்பை கொட்டி இருக்காரு விக்ரம். ஆரம்பத்துல பாடி-பில்டரா வர காட்சிகள், பிறகு மாடலா மாறிய லீ, எதிரிகளால் பழிவாங்கப்பட்டு உருவம் சீர்குழைந்து வர கூனன்னு எங்கேயும் குறை வைக்காம நிறைவா செஞ்சிருக்காரு. ரொமான்ஸ்ல எப்பவும் ஸ்கோர் பண்ண மாட்டாரே, எப்டி ஏமியோடன்னு  யோசிச்ச எடத்துல எல்லாம் நல்லாவே பண்ணிருக்காரு. கோவிலுக்கு வெளியே ஏமி தன்னை அடையாளம் கண்டுகொள்ள முடியாததால் கலங்கும் இடத்தில் அப்ளாஸ் அள்ளுகிறார். விக்ரமின் உழைப்பு இந்த படத்துக்கு அசுரபலம். ஆனா அந்த வாயில மெட்ராஸ் தமிழ் தான் சிம்பு படம் மாதிரி வரவே மாட்டேன்னு அடம்புடிக்குது - மோடம், அட்வைசுமென்ட்ன்னு ரொம்ப செயற்கைத்தனம், அந்த தமிழுக்கே உரிய ஏற்ற இறக்கம் இல்லாமல். ரெண்டாவது பாதியில் டயலாக் டெலிவரி கன்டிநியுட்டி வேற மிஸ்ஸிங். மாடல் ஆன ஒடனே நாக்குல த்ரிஷா தமிழ் தாண்டவம் ஆடுது Accentல,  'ஹேய்ய்ய்ய், என்ன இடம் இது?'ன்னு. குற சொல்லனும்ன்னு இல்லனாலும் உறுத்தலா இருந்த விஷயங்கள்.


காபின்னா சூடு மாதிரி, ஏமின்னா சூ(மூ)டு. லேடியோ பாடல்ல எல்லாம் ம்ம்ம்ம்ம்ம்ம்.. ஓம் சிவராஜாநமஹ. . என்ன தில்லாலங்கடி பண்ணி யூ வாங்குனங்கன்னு தெரில. நடிப்புல ரொம்ப பிரமாதம்ன்னுல சொல்ல முடியாட்டியும், அந்த கேரக்டர்க்கு என்ன தேவையோ அத காட்டி செஞ்சிருக்காங்க. லிப்-சின்க்லா கொற சொல்ல முடியாது, ஏனா நம்ப நாட்டு ஆளுங்களே நாட்டாம மிக்ஸ்சர் அங்கிள் மாதிரி தான் அசைக்கிறாங்க. படத்துக்கு அடுத்து மிகப்பெரிய பிளஸ் பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவு மற்றும் ரஹ்மானின் பாடல்கள், பின்னணி இசை. லைட்டிங், ஆங்கில்ஸ் (விகார முகத்தை மேக்-அப்ன்னு பளிச்சாக தெரியாமல்)எல்லாமே மெரிசல் பண்ணிருக்காரு. சீனா காட்சிகள், பாடல்கள், சண்டை காட்சிகள்ல குறிப்பா ரெண்டாம் பாதியில் வர முதல் சண்டைன்னு நெறைய எடத்துல பி.சி மேஜிக். சமீப காலத்தில் ரஹ்மானின் பின்னணி இசை ஐ அளவுக்கு பெரிசா ஈர்க்கவில்லை. காதல், சண்டை, செண்டிமெண்ட் காட்சிகள்ன்னு வரைட்டியான மியூசிக். ஏமி பொய் காதல் சொல்லும் இடத்தில் ஸ்ரேயா கோஷல் ஹம்மிங் - Highness. இனிமே மூணு மாசத்துல மியூசிக் கேட்டா மொகறகட்டைல குத்துங்க.

அடுத்து 'ஜே'ன்னு ஒரு ஸ்கிரிப்ட் இருக்கு, அஞ்சு வருஷம் நடிக்கிறீங்களா ?


இவ்ளோ விஷயங்கள் சொன்னியே, ஷங்கர் பத்தி சொல்லலையான்னு கேட்டா, படத்தோட மைனஸ்ஸே அவரோட நோஞ்சான் திரைக்கதையும், சுவாரசியம் இல்லாத காட்சி அமைப்பும் தான். முதல்வன் ரகுவரன் மாதிரி வில்லன் கேரக்டர் வச்சவரு, 'ஐ'ல  வீக் வில்லன்கள் வச்சு சொதப்பிட்டாரு. ஒரு ஹீரோ கெத்தா தெரியனும்ன்னா, இல்ல அவன் பழி வாங்கணும்ன்னா அந்த வில்லன்கள் மேல நமக்கு வெறுப்பு வரணும். ஆனா இதுல எல்லாமே டம்மி-பீஸ் பேரரசு டைப் காமடி வில்லைன்களா இருக்காங்க. அந்நியனில் ஆயிரம் லாஜிக் ஓட்டைகள், நெறைய வில்லைன்கள் இருந்தாலும் படம் பாக்குறவங்க சந்திச்ச பிரச்சனைகள காட்டி, அதோட நாமளும் பயணிச்சு, 'அவன எதாச்சும் பண்ணனும்டா'ன்னு நம்ம ஆதங்கத்த தூண்டிவிட்டு வில்லனுக்கு தண்டன கொடுப்பாரு. எ.கா - ரயில் உணவு - சொக்கன் 65 காட்சி. இதுல விக்ரம் கேரக்டர்ங்ற தனி ஒருவனின் பழிவாங்கும் கதைன்னு வேற ரூட்ல போகும் போது விக்ரமோட இந்த நெலமைக்கு நாம பரிதாப படுற மாதிரி காட்சிகள் இருக்கணும், ஆனா திருநங்கை காதல், விளம்பர நடிகன், கார்பரேட் முதலாளின்னு எல்லாரோட கேரக்டரும் வீக்கா இருந்ததால, விக்ரம் அவர்களை  போய் பழிவாங்கும் போது  நமக்குள் எந்தவித உணர்வும் இல்லை - சரி வந்துட்டல, சீக்ரம் தண்டன கொடுத்துட்டு போன்னு இருந்துச்சு. பாடல்களில் தெரிந்த (லேடியோ, பூக்களே, ஐலா) ஷங்கரின் ஸ்டாம்ப், திரைக்கதை வசனத்தில் மிஸ்ஸிங். சுஜாதா absence?

 திருநங்கைக்கும் காதல் வந்தால் எப்படி இருக்கும்ன்னு நல்லா யோசிச்சாலும் அந்த கேரக்டரை வடிவமைத்த விதம் பி-கிரேட் டைரக்டரை விட கேவலம். அவர்களை கேலி-பொருளாக சித்தரித்து, நாட்டாம டீச்சர் மாதிரி 'ஆஹ்ஹ்ஹ்ன்ன் ஆஹ்ஹ்ஹ்ன்ன் ஆஹ்ஹ்ஹ்ன்ன்' மியூசிக்ல உலவவிட்டு, அது காதலா காமமா இல்ல கருமமான்னு தெளிவே இல்லாத கதாபாத்திரம். அங்கவை சங்கவை அடுத்து Worst of Shankarன்னே சொல்லலாம். இதை நீக்குனா படத்துல ஒரு 20 நிமிஷ மொக்க கொறையும். விக்ரம் மண்டையில் அடிக்கவும், அதுக்காக  பழி வாங்க ஒரு கேரக்டர் அவசியமே இல்ல. சும்மா வர அடியாள் கூட அத பண்ணுவானே. ஷங்கர் பெருசா நம்புன (?!) சுரேஷ் கோபி கேரக்டர்லா படம் ஆரம்பத்துலேயே ஈஸியா கஸ் பண்ற ட்விஸ்ட். ப்ரா ஜெட்டியை பார்த்து மூடு ஏத்தி ஹீரோயின் மேல ஆசைபடுறது, 'ஹே மையில்ல், இங்க தொட்ட எதாச்சும் பண்ணுதா'ன்னு எகிப்துல புதைக்கப்பட்ட மம்மி காலத்து வில்லனிசம். திரைக்கதைல எப்பவுமே லீனியர் narrationல போய் செகண்ட்-ஹாப்ல ஒரு 20 நிமிஷம் பிளாஷ்பாக் வச்சு தட்டி தூக்குவாரு ஷங்கர். இதுல நான்-லீனியர்ல ட்ரை பண்ணி படம் முழுக்க பிளாஷ்பாக் தான் நெறஞ்சி இருக்கு. நடுவல க்ரூப்ல-டூப்பு, சிரிச்சா போச்சு மாதிரி விக்ரம் பழி வாங்குற காட்சிகள். படத்தோட Pacing இதுனால ரொம்ப அடிவாங்குச்சு. பத்தாததுக்கு மூணு மணி நேரத்துக்கும் மேல வேற. அடிக்கடி விளம்பரம் வேற போட்டதால நானும் பிரேக் உட்டுட்டான்டான்னு மூச்சா போக எழுந்தா Scene Transitionஆம். சண்டை காட்சிகள் நல்லா எடுத்தாலும் நாம டையர்ட் ஆகுற வரைக்கும் அடிச்சிட்டே இருக்காங்கப்பா. 10 பேர அடிச்ச ஒடனே சண்ட முடிஞ்சிடு சாமின்னு நிமிர்ந்து உக்காந்தா இன்னும் 30 பேர் அடிக்க வராங்க, டேய் அங்க என்ன கூழா ஊத்துறாங்க , வந்து வாங்கிட்டு போக?

விக்ரமின் உழைப்புக்கு ஏத்த வெற்றியும் அங்கீகாரமும் கிடைக்கணும், ஷங்கர் தோக்க கூடாதுன்னு நானும் ஆசபடுறேன். 200 கோடி, அர நாள் கூத்துக்கு அர்னால்ட்ட கூட்டிட்டு வந்து ஆடியோ, டீசர் ரிலீஸ் செலவுன்னு பில்ட்-அப் பண்ண நேரத்துக்கு திரைக்கதைய கொஞ்சம் பில்ட் பண்ணிருந்தா இந்த 'ஐ' HIGHஆ வந்துருக்கும். 'ஏ'க்கும் 'ஒ'க்கும் நடுவுல சிக்கிகிட்ட ஐ மாதிரி. 'ஏ'தோ பரவாலக்கும்  'ஒ'ன்ஸ் மோர்க்கும் நடுவுல இந்த 'ஐ' . விக்ரம்காக கண்டிப்பா திரையரங்கில் ஒன்ஸ் பாக்கலாம்.


ஐ - 'ஐ' want Shankar back

Tuesday, 16 December 2014

லிங்கா - ஒரு காலத்துல ஒரு ராஜா இருந்தானாம்

நான்கு வருடங்கள் கழித்து சூப்பர் ஸ்டாரின்  திரைப்படம் - அதுவும் லொள்ளு சபா ஜீவா டூப்பு போடாமல் தலைவர் லைவ்வாக நடித்த படம். படையப்பா மாபெரும் வெற்றிக்கு அடுத்து கே.எஸ்.ரவிகுமாரோடு இணையும் படம். எந்திரன் மெகா-பட்ஜெட், க்ளாஸ் மேக்கிங்ன்னு ஒரு பெஞ்ச்-மார்க் செட் பண்ண பிறகு வருகிற படம்ன்னு நிறைய எதிர்ப்பார்ப்போடு ரஜினி அவர்களின் பிறந்த நாள் அன்றே ரசிகர்களுக்கு கூடுதல் விருந்தாக வந்த லிங்கா - நின்னுச்சா ஸ்ட்ராங்கா??

ரஜினி என்கிற ஹீரோ மஜெஸ்டிக்கா இருக்க முக்கிய காரணங்கள் - கம்பீர நடை, ஹே ஹே ஹேன்னு பின்னணியில் ஹீரோயிசத்தை கூட்டுற இசை, டைமிங்க்கு கரெக்டா இறங்குற பஞ்ச்-டயலாக்குள், குறிப்பா அந்த ஹீரோ ஹீரோவா தூக்கி நிறுத்துற ஸ்ட்ராங்கான வில்லன். லிங்காவில் இருக்குற பெரிய பிரச்சனையே டம்மி-பீஸ் வில்லைன்ஸ் தான். பிளாஷ்பாக் வில்லன் படையப்பா மணிவண்ணன் மாதிரி ஒண்ணு சொத்த ஏமாத்தி வாங்குறான், இல்ல ஜெய்ஷங்கர் மாதிரி குதிரைல சுத்திட்டு இருக்கான். மாடர்ன் வில்லன் அதுக்கு மேல - கார்ல வரான், பாரசூட்டுல பறக்குறான், அப்றோம் கீழ விழுந்து இறக்குறான். எப்பவுமே ரஜினிக்கும்-வில்லனுக்கும் இருக்குற One-to-One confrontation scenes லிங்கால சுத்தமா இல்லாததால ரஜினிங்கற ஹீரோ அனாதையா ஸ்க்ரீன்ல பொலிவே இல்லாம இருக்காரு . சிவாஜில 'என்னங்க ஆதி இப்டி ஆகி போச்சு', 'பஜ்ஜி சாப்டுறியா' , ஆதிஷேஷன்ன சர்ல கால்ல சுத்திட்டே 'சிவாஜியும் நான் தான், எம்.ஜி.ஆரும் நான் தான்'ன்னு இப்டி ஹீரோசித்த தூக்கி நிறுத்திற காட்சிகள் லிங்காவுல மிஸ்ஸிங். ரஜினிக்கே உரித்தான Elements படத்துல அங்கங்கே இருந்தாலும், தூக்கி நிறுத்த பின்னணி இசையில் ரஹ்மான் பெருசா ஸ்கோர் பண்ணாததால் அந்த காட்கிகள் கொடுக்க வேண்டிய பெரிய Impacta தரல.

தலைவா வானத்துல பாத்தியா ஆரஞ்சு கலர்ல ஒரு உருண்ட, ஏதோ மார்ச்ஸாம்
கண்ணா , அது மார்ஸ் இல்ல.. நேத்து புட்பால் நெனச்சு பாஸ்கட்-பால்ல எட்டி உட்டேன்னா .. ஹாஹாஹா 

படத்த ஒத்த ஆள தன் தோளுல தூக்கி சுமந்திட்டு இருக்காரு லிங்கேஸ்வரனா வர பிளாஷ்பாக் ரஜினி. கம்பீரம், நடை , குரல்ன்னு துளியும் சோடை போகல.. இந்தியனே வா பாடலில் வரும் sequences, இந்திய கொடியை சுட்ட பிரிட்டிஷ் கவர்னருக்கு கொடுக்கும் பதிலடி (ராண்டி கேமரா-ஒர்க் அட்டகாசம்), உண்மை ஒரு நாள் வெல்லும் பாடல் தொடங்கும் முன் வரும் sequences, பொன்னோடு மண் எல்லாம் போனாலும் அவன் புன்னைகையை கொள்ளையிட முடியாது வரிகள் அப்போ ரஜினியின் சிரிப்பு - இப்டி ரஜினியிடம் பிடித்த, ரசிகர்கள் எதிர்பார்க்கும் அனைத்தையும் லிங்கேஸ்வரன் கேரக்டரில் கணக்கச்சிதமாக வைத்த ரவிகுமார் இன்னொரு ரஜினியில் சுத்தமாக கோட்டை விட்டார். ப்ரெசென்ட் ரஜினியின் மேக்-அப், பாடி லாங்குவேஜ்,  நாக்கு குழையும் டயலாக் டெலிவரின்னு ஒரு எனேர்ஜியே இல்லாமல் ஒப்புக்கு சப்பானா உலவிகொண்டிருந்தார். சந்தானத்தின் டைமிங்-காமடி தான் முதற்பாதி தோய்வே இல்லாமல் போன காரணம். நடந்து முடிந்த ஆஸ்திரேலியா -இந்தியா டெஸ்டில் எப்டி முரளி விஜய்யும்-விராட் கோலியும் பார்ட்னர்ஷிப் போட்டு ஆட மத்தவங்கலா பேந்த பேந்த ஆடுனாங்களோ அது மாதிரி முதற்பாதி சந்தானம் -இரண்டாம் பாதி ரஜினி தான் இந்த படத்தை காப்பாத்தினாங்க.

வட இந்தியாவில் ரஜினிகாந்த் ஜோக்க்கு சவால் விடும் வகையில் க்ளைமாக்ஸ், 'இது ரஜினின்னு சொன்னா சௌந்தர்யா கூட நம்ப மாட்டாங்க' அளவுக்கு டூப்பு தெளிவா தெரியுது. எடுக்கும் போது இவங்களுக்கே சிரிப்பு வந்துருக்காதோ? பைக்-சிக்னல்ல மீட் பண்ற 30 செகண்ட் பழைய நண்பன் மாதிரி காதுவாக்குல 'காசு வாங்கிட்டேன், டேம்ம வெடிக்கிறேன்'ன்னு சால்பி ட்விஸ்ட்ட வச்சிட்டு அதுக்கு இன்னொரு ரஜினி. அவ்ளோ லெங்த் பிளாஷ்பக் முடிஞ்ச உடனே படமும் அவசர கதியில் முடிச்சு விட்ட பீல். பிளாஷ்பேக் காட்சிகளை குறைத்து ப்ரெசென்ட் ரஜினிக்கும் - வில்லனுக்கும் 2-3 Confrontation சீன்ஸ் வச்சிருந்தா படம் ரேஞ்சே வேற, இல்ல ப்ரெசென்ட் ரஜினி கேரக்டரே இல்லாம ஒரு முழு-நீள பீரியட் பிலிமா ரஜினிக்கும் -பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கும் நடக்குற கதைன்னு நகர்த்தி இருந்தா இந்த படம் முன்ன சொன்னத விட இன்னும் பெருசா வந்துருக்கும்.  ஒரு நல்ல கதைய வேஸ்ட் பண்ணிட்டாங்கன்னு தான் சொல்லணும்.

லிங்கா - பாக்கலாம் ஒரு தபாக்கா

வருகைக்கு நன்றி!!

Saturday, 16 August 2014

அஞ்சான் - கவுண்டமணி விமர்சனம்

லிங்குசாமி, சூரியா கால்-ஷீட் கெடச்ச ஒடனே - சொம்பு பலபலன்னு இருக்கே, வச்சு செஞ்சுற வேண்டியது தான்.ரீலிஸ் ஆன அன்று -ஐய்ய்ய்ய்ய் சூரியா, ஐய்ய்ய்ய்ய் சமந்தா. பங்க் பங்க் பங்க் மாஸ் தான்பா இன்னிக்கிப்ப்ப்ப்பா, இவல நக வாங்கலன்னு யாரு அழுதா? படத்த சீக்கிரம் போடுங்கப்பா, சூரியாக்கு இது பாட்ஷா மாதிரி இருக்குமாமே, அய்யோ நான் பாத்தே ஆகணுமே


அய்ய்யய்ய என்ன 15 நிமிசம் ஆச்சு, இன்னும் ராசூ பாயா காணோம்? டேய் பில்ட்-அப் போதும் மகனே, ராசூ பாய் ஒஷ்தாவையா ராசூ பாய் ஒஷ்தாவையா ஊருசனம் துடிக்குதய்யா


இது தான் நீ சொன்ன ஸ்கிரீன்னு கிழியுற மாஸாடா லிங்கு? வரே வா வாட்டே ஹீரோ இண்ட்ரோ, எங்க ஊருல பிஜிலி வெடி வெடிக்க பசங்க இப்டி தான் ஊதவத்திய வச்சிட்டு வருவானுங்க.. ராசூ பாய்இது லவ் படமா, இல்ல ஆக்‌ஷன் படமா? இன்னும் தேடிட்டே இருக்கேன், எங்கதான்யா நீ சொன்ன சீனுக்கு சீன் மாஸ் பறக்கும் ஸ்கீரின்ப்ளே?சமந்தா பிகினி சீன் இருக்கும்ன்னு சொல்லி அனுப்பிச்சானே? வருமா வராதா?ஓஓஓஓ, நீ சொன்ன உலக மகா இண்டர்வல் ட்வீஸ்ட் இது தானா? படம் ஆரம்பிச்ச பத்து நிமிசத்துலேயே நான் கண்டுபிடிச்சிட்டேனேடா ஜிம்பலக்கடி பம்பாஇடைவேளை - என்னப்பா ஒரு கண்ண காணோம்? ராஜூ பாய் சுட்டு சுட்டு ஸ்கீரின் கிழிஞ்சி என் ஒரு கண்ணு போனது தான் மிச்சம்டாஎன்னது? இன்னும் செகண்ட் ஆப் வேற இருக்கா?ஒரே ஆறுதல் - யுவன்சங்கர் ராஜா பாடல். நைஸ் ப்ரேக்-டைம்


எவன்டா அவன் தனியா கை தட்டிட்டு இருக்கான்? ஓ சூரியா ஃபேன்னா? சூப்பரப்பேபர்தா பொண்ணு தான் சமந்தாவா? அய்ய்ய்ய்யோ அம்ம்மாமாமா இதயும் ட்விஸ்ட்ன்னு சொல்வானே அந்த டைரக்டருஆப்பரேட்டரு, டேய் ஆப்பரேட்டரு - படத்த எப்படா முடிப்ப? 200 ரூபா செலவானாலும் சூரியா படம் பாப்பேன்னா? டேய் 70 ரூபாடா 70 ரூபா இருந்தா ரோட்டு கடைல பிரியாணி வாங்கி சாப்டு உன்ன மாதிரி பல்லு குத்திட்டு இருப்பேனேடா


படம் முடிஞ்சிருச்சு, எல்லாரும் கெளம்புங்க.. டேய் இனிமே படம் முடிஞ்சா என்ன, முடியலன்னா என்ன? அதான் எனக்கு எல்லாம் முடிஞ்சு போச்சே. ஒடம்பு புல்லா பேங்க் பேங்க் பேங்க் தான்.லிங்கு, லிங்கு டேய் - இது தான் நீ சொன்ன பாக்‌ஷா, போக்கிரி படமாடா? இது நியாயாமா, உனக்கு அடுக்குமாடா? அது எப்டிடா மனசாட்சியே இல்லாம கத திரைக்கதல உன் பேர போட்டுருக்க? அஜித்துக்கு வத்தலும் தொத்தலுமா ஒரு ஜீ, விக்ரம்க்கு ஓட்டயும் ஒடச்சலுமா ஒரு பீமா கொடுத்த.இது தான் ஏதோ கொஞ்சம் பாக்குற மாதிரி இருக்கும் நெனச்சா, அதயும் முன்ன விட கேவலமா எடுத்துவச்சிருக்கியே.. அப்போ யூ.டிவி தனஞ்செயன்?
வருகைக்கு நன்றி !!

Saturday, 21 June 2014

அயலும் நிஜனும் தம்மில்

எது நல்ல படம்? போரடிக்காம போச்சுன்னா நல்ல படம். கொடுத்த காசுக்கு ஒர்த்தா இருந்தா நல்ல படம். ஒரு ஃபீல் குட்டா இருந்தா நல்ல படம். இந்த மாதிரி ஒரு மனுஷன நம்ம லைப்ல இருந்துருக்கலாமோன்னு ஃபீல் பண்ண வச்சா நல்ல படம். நெஞ்ச கணக்க வைக்குற மாதிரி இருந்தா நல்ல படம். படம் முடிஞ்சும் நம்மள தூங்கவிடாம, சீன்ஸ்லா கண்ணுலேயே இன்னும் இருந்தா நல்ல படம். இது எல்லாம் ஒரு படத்துலேயே இருந்தா? - அது உண்மையிலே அற்புதமான படம் - அப்ப அயலும் நிஜனும் தம்மில் ஒரு அற்புதமான படம்.


தமிழ் சினிமாவுல க்ளிச்சேவா வர காட்சி - உயிருக்கு போராடிட்டு இருக்குற ஒரு சின்ன கதாபாத்திரம், டாக்டர் வராரு, கண்ணாடிய கெளட்டிட்டே ‘சாரி, நாங்க எவ்ளவோ ட்ரை பண்ணோம். பட்..’ இதுக்கு பின்னாடி இருக்குற ஒரு 2 மணி நேர கதய இயக்குநர் லால் ஜோஸ் கொடுத்துருக்காரு. பட், டாக்டர் ஹீரோ ப்ரித்வி கண்ணாடிய கெளட்டல, டயலாக்கும் சொல்லல.. இப்டி படம் முழுசா தேவையில்லாத வசனங்கள், ஆரஞ்சு பழம் மாதிரி நெஞ்ச புழியுறேன் எமோசனல் சீன்ஸ்ன்னு இல்லாம இசை, அமைதி, முகபாவனை வச்சே நமக்கு புரிய வைக்கிறாரு இயக்குநர். டாக்டர்ன்னா நமக்குன்னு இருக்குற ஒரு இமேஜ் - பணம் புடுங்குறவரு, காச வச்சா தான் ஆப்பரேஷன் பண்ணுவேன்னு அடாவடி பண்றவரு. ஆனா இந்த படத்துல அப்டி டாக்டர தவறா சித்தரிக்காம, எல்லா கதாபாத்திரங்களும் நல்லவங்களாவே நடமாட விட்டுருக்குறது மிகப்பெரிய ப்ளஸ் - படம் பாக்கும் போதே அவ்ளோ ஒரு பாசிட்டிவ் வைப். காலேஜ் செகண்ட் இயர்ல ஒடம்பு சரியில்லாம சீரியஸ்ஸான நெலமைல ஹாஸ்பிட்டல்ல இருந்தப்போ, பிரதாப் போத்தன் மாதிரி ஒரு டாக்டர் தான் என்ன காப்பாத்தினாரு, காசு முக்கியம்ன்னு பாக்காம. இன்னி வரைக்கும் நான் ஒடம்பு சரியில்லன்னு அவர பாக்க போனா என்கிட்ட கன்சல்டிங் ஃபீஸ் வாங்கற்தில்ல ‘ஆல்ரெடி நான் நெறய வாங்கிட்டேனே கார்த்தி’ன்னு. இப்டி நாம வாழ்ந்து பழக்கப்பட்ட நல்ல கேரக்டர்ஸ் எல்லாம் திரைல பாக்கும் போது ஒரு ஈர்ப்பு கெடைக்குமே - அப்டியான படம்.

தொண்டய அடைக்குற ஷாட். ரெண்டு நிமிஷம் Pause பண்ணி.... ப்ளிச்ச்ச்


ஒரு ஃபெயில்லான ஆப்பரேஷனால் காணாமல் போன ப்ரித்வி, அப்டியே நான்-லீனியர் நரெஷன்ல அவரோட கல்லூரி, காதல் வாழ்க்கை - அவருக்கும் ப்ரதாப் போத்தனுக்கும் இடையே இருக்கும் ரோல்-மாடல் தாண்டிய உறவு என்று பயணிக்கும் இன்னொரு கதை - ப்ரித்வி எங்கே? அவரின் ஃப்ளாஸ்பேக் காதல் கைகூடியதா? இப்டி ரெண்டு காலகட்ட த்ரில்லரில் Parallela பயணிக்கிற திரைக்கதை. ப்ரித்விராஜ் எவ்வளவு அற்புதமான நடிகன். நம்ம தமிழ்சினிமாவுல தான் அவர டம்மி டப்பாசா ஆக்கிட்டோம். படம் முழுக்க தன்னோட இயல்பான நடிப்பால கவர்ந்து இழுத்துட்டாரு. தன் காதலியோடு நடக்கவிருக்கும் ரகசிய திருமணத்திற்கு தடங்கல் ஆரம்பிப்பதிலிருந்து  ஒரு 15 நிமிஷம் அவரின் நடிப்பு - டாப் க்ளாஸ். அழுகை கூட அவ்ளோ இயல்பா வருதுய்யா இவருக்கு. கலாபவன் மணிக்கும் அவருக்கும் இருக்கும் என்ன கைய்ய புடிச்சி இழுத்தியா தகராறால் ஒருகணம் அவர் கல் நெஞ்சகாரனாக ஆகும் இடமாகட்டும், மணியின் பெண்ணை ஸ்கூல்ல பார்த்து ஃபீல் பண்றதாகட்டும் எங்குமே ப்ரித்வியின் நடிப்பு சோடை போகவில்லை. இது நான் பார்க்கும் ப்ரித்வியின் மூண்றாவது படம் - இனிமேலாச்சும் பெரிய இயக்குநர் படத்துல ஓரமா ஒரு செகண்ட் ரோல் கெடச்சாலே வரம்ன்னு நெனச்சு தமிழ் சினிமா வுட்டு ஓரமா போயிறாம நல்ல கதயா தேர்ந்தெடுத்து நடிங்க பாஸ் - காவியத்தலைவனுக்கு வெயிட்டிங்.

லூசு கேரக்டர்ல பாத்து பழக்கப்பட்ட ப்ரதாப் போத்தன் இதுல செம லவ்வபள் காட்-ஃபாதர் ரோல். ப்ரித்வியிடம் சீனியர் டாக்டராக பழகாமல், அன்பால் திருத்தும் இடத்தில் எல்லாம் செமயா ஸ்கோர் பண்ணிருக்காரு. நரேன், ரம்யா நம்பீசன், தோமச்சன் இப்டி எல்லா கதாபாத்திரங்களும் தேவயில்லாத ஆணியா இல்லாம படத்த நகர்த்தி செல்வதற்கு உறுதுணையாக இருக்கின்றனர். பின்னணி இசையும், ஒளிப்பதிவும் கூடுதல் பலம். படம் முடிஞ்ச ஒடனே யூ-ட்யூப்ல பாட்ட திரும்ப கேக்கணும்ன்னு இருந்துச்சு. க்ளைமாக்ஸ் மட்டும் கொஞ்சம் அவசரமா முடிச்ச மாதிரி ஒரு உணர்வு இருந்தாலும், படம் முடிய கூடாதுன்னு நம்ம உள்ளுணர்வு எதிர்பார்த்ததால இது குறையா தெரிஞ்சிச்சோ?

Flawless படம்ன்னு சொல்ல முடியாது. ஆனா அற்புதமான நடிப்பு, மேக்கிங், ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி இதுக்காகவே அயலும் நிஜனும் தம்மில் கண்டிப்பா பாக்க வேண்டிய படம் - டோண்ட் மிஸ்

அயலும் நிஜனும் தம்மில் - படம் பாக்க லைன்ல போய் நில்

வருகைக்கு நன்றி !!

Blogger templates

Custom Search